இலங்கையின் உள்ளூர் கழகங்களுக்கிடையிலான இருபதுக்கு-20 தொடர் கடந்த 24ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டித் தொடரில் என்.சி.சி. அணிக்காக விளையாடி வரும் லசித் மாலிங்க தனது திறமைகளை மீண்டும் நிரூபித்து வருகின்றார்.
இலங்கை அணியின் முன்னணி பந்து வீச்சாளரான லசித் மாலிங்க இருபதுக்கு-20 போட்டிகளில் மிகச்சிறப்பாக பந்து வீசக்கூடியவர். எனினும் கடந்த வருடம் அவருக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
மோசமான பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கெதிரான தொடரிலும் மாலிங்க இணைக்கப்படவில்லை.
எனினும் தனது பந்து வீச்சை நிரூபிக்கும் முகமாக உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில் மாலிங்க பங்கேற்று வருகின்றார். இதில் சனிக்கிழமை களுத்துறை டவுன் கழகத்திற்கெதிராக நடைபெற்ற போட்டியில் மாலிங்க 30 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தியதுடன், நேற்று நடைபெற்ற பொலிஸ் கழகத்துக்கெதிரான போட்டியில் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இவ்வாறு சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வரும் லசித் மாலிங்க இலங்கை – இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இருபதுக்கு-20 போட்டியில் இணைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment