இந்திய அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென்னாபிரிக்க அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்பம் சற்று சவாலக்குட்படுத்தப்பட்டது. ரோஹித் சர்மா ஓட்டங்கள் இன்றியும், விராட் கோஹ்லி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
எனினும் தவான் 24 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட இலக்கை உயர வித்திட்டனர்.
தொடர்ந்து களமிறங்கிய மனிஷ் பாண்டி மற்றும் டோனி ஜோடி அபா ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி 56 பந்துகளுக்கு 98 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 188 ஆக உயர்த்தினர்.
மனிஷ் பாண்டி அபாரமாக ஆடி 48 பந்துகளுக்கு 79 ஓட்டங்களையும், டோனி தனது இரண்டாவது இருபதுக்கு-20 அரைச்சதத்தை பூர்த்திசெய்து 28 பந்துகளுக்கு 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, இந்திய அணியின் வேகப்பந்துக்கு சற்று தடுமாறியது. எனினும் கிலாசன் அதிரடியாக ஆடி 30 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களை குவித்தார்.
மறுமுனையில் அணித்தலைவர் ஜே.பி.டுமினி ஆட்டமிழக்காமல் 40 பந்துகளுக்கு 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, தென்னாபிரிக்க அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இந்திய அணிசார்பில் ஜெயதேவ் உனாட்கட் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தினார். எனினும் இந்திய அணியில் மிகவும் எதிரபார்க்கப்பட்ட சஹால் இறுதிவரை விக்கட்டுகளை கைப்பற்றவில்லை.
அவரது நான்கு ஓவர்களுக்கு தென்னாபிரிக்க அணி 7 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கலாக 64 ஓட்டங்களை குவித்திருந்தது.
நஇந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக தென்னாபிரிக்க அணியின் கிலாசன் தெரிவுசெய்யப்பட்டதுடன், இருபதுக்கு-20 தொடர் 1-1 என சமனிலையடைந்துள்ளது.

0 comments:
Post a Comment